நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை திட்டம் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குக் கூடுதல் இடங்களை வழங்குவது, அவர்களுக்கு அளிக்கப்படும் ‘அரசியல் பரிசு’ என்று விமர்சித்த அவர், இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் தவறான செய்தியைத் தரும் என்றும் எச்சரித்தார்.

மக்களவை இடங்களை 850-ஆக அதிகரிப்பது சபையின் செயல்பாட்டைப் பாதிக்கும் என்றும், மாநிலங்களவை இடங்களை அதிகரிக்காமல் இருப்பது இரு அவைகளுக்கும் இடையே சமநிலையைச் சீர்குலைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மகளிர் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைப்பது ஒரு ‘அரசியல் பணமதிப்பிழப்பு’ போன்றது எனக் குறிப்பிட்ட தரூர், தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க வேண்டாம் என உரக்கப் பேசியுள்ளது தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.