தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர் மோடி, பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் தரையிறங்கினார். இங்கிருந்து பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு கார் மூலம் சென்றார். இதனையடுத்து நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது, தமிழக மக்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள். நெல்லையப்பர் காந்திமதி அம்மனுக்கு எனது நமஸ்காரங்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லையப்பர் காந்திமதி அம்மன் நல்லாசி தர வேண்டும்.

தமிழக மக்கள் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள் தமிழக மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயல்படுவேன். இது மோடியின் உத்தரவாதம். பாஜகவின் சமூக நீதி, நேர்மையான அரசியலை தமிழக மக்கள் கவனித்து வருகிறார்கள். தமிழகத்தில் குழந்தைகள் தொடங்கிய அனைவரும் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழக மக்கள் பாஜக அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழக மக்கள் வருங்காலத்தைப் பற்றிய தெளிவுடன் இருப்பவர்கள்.தமிழ்நாட்டு மக்கள் வருங்காலம் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் தெளிவாக இருப்பார்கள்.

புதிய சிந்தனையோடு இந்தியாவோடு சேர்ந்து தமிழகமும் சிந்திக்கிறது. நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றம் இந்தியாவில் ஏற்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் டெல்லிக்கு மிக அருகில் தமிழ்நாடு வந்துவிட்டது. மத்திய அரசால் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பெருமை அதிகரித்துள்ளது” என தெரிவித்தார்.