தமிழகத்தில் இரட்டிப்பு பணம் மற்றும் நிலம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்யும் நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி மன்னார் புரத்தை சேர்ந்த எல்பின் என்ற நிதி நிறுவனம் சென்னை, மதுரை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் மற்றும் நிலம் தருவதாக கூறி ஆசை காட்டி மோசடி செய்துள்ளனர்.

இந்த நிறுவனம் சார்பாக அறம் மக்கள் நல சங்கம் டிரஸ்ட் மற்றும் அறம் டிவி சேனல் ஆகியவற்றை பயன்படுத்தியும் மோசடி நடைபெற்று உள்ளது. இந்த மோசடி தொடர்பாக அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரமேஷ் குமார் நடத்தி வந்த ஈ காம், மார்க்கெட் இந்தியா, வரக மணி, ஆர் எம் ஹெல்த் கிரியேஷன் உள்ளிட்ட வேறு சில நிறுவனங்களில் பொதுமக்கள் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.