தமிழகத்தில் பொதுமக்கள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் ஒரு பெரிய முன்னேற்றமாக, மாநில அரசு ‘வாட்ஸ்-அப்’ மூலம் அரசு சேவைகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் ‘மெட்டா’ நிறுவனத்தின் இந்திய வர்த்தக மெசேஜ் பிரிவு இயக்குநர் ரவி கார்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய சேவையின் சிறப்பம்சமாக, ‘வாட்ஸ்-அப்’ சாட்பாட்டை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தலாம். இதன் மூலம் குடிமக்கள் மின்சாரம், குடிநீர் கட்டணங்களை செலுத்துவது, மாநகராட்சி வரிகளை கட்டுவது, மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, புகார்கள் அளிப்பது போன்ற முக்கிய சேவைகளை தங்கள் கைப்பேசியிலிருந்தே எளிதாக மேற்கொள்ள முடியும். இனி சேவை மையங்களுக்கு செல்வதற்கோ, பல முறை அலுவலகங்களை நாடுவதற்கோ தேவையில்லை. மக்கள் எங்கு இருந்தாலும், எந்த நேரத்திலும் நேரடியாக சேவைகளைப் பெற முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கு 50 அத்தியாவசிய அரசு சேவைகள் ‘வாட்ஸ்-அப்’ மூலம் கிடைக்கவுள்ளது. இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்னித், மின் அளுமை முகமை முதன்மை செயல் அதிகாரி ஆல்பி ஜான் வர்கீஸ், இணை முதன்மை செயல் அலுவலர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் மற்றும் இணை இயக்குநர் பிரியா உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்த டிஜிட்டல் சேவை விரைவில் தொடங்கும் எனவும், தொடங்கியவுடன் மக்கள் அதனால் அதிகளவில் பயன் பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.