சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நேற்று முன்தினம் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த டிரைவர் சுதாகர் உள்ளிட்ட மூவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவ இருப்பிட அதிகாரிகள் சரவணன், முரளிதரன் ஆகியோரிடம் கேட்டறிந்து, சிறப்பான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

விபத்து நடந்த உடனடியாகவே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

விபத்துக்கு காரணமாக ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்களை நியமிப்பதே என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளன. இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர்,

“அரசு போக்குவரத்து துறையில் தேர்ந்த அனுபவமும் தகுதியும் உள்ள டிரைவர்கள்தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது வெறும் அரசியல் நோக்கத்துக்காக மட்டுமே,” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் கூடுதல் நிவாரணமும் பரிசீலிக்கப்படும். டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சிகளை அதிகரிக்கும் திட்டமும் நிறைவேற்றப்படும். நீண்ட தூர பேருந்துகளை அனுபவமுள்ள டிரைவர்கள்தான் ஓட்டி வருகின்றனர். மேலும் இந்த விபத்து ஏதோ ஒரு அஜாக்கிரதையால் நிகழ்ந்திருக்கலாம். டிரைவர்களுக்கு பணிச்சுமை அதிகமா என்ற கேள்வியையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.