ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே உள்ள சேரான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஷாலினி (17), தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்திய முனியராஜ் (21) என்பவரால் கழுத்தில் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் பள்ளிக்குச் செல்லும் மாணவியை முனியராஜ் பின் தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், முனியராஜ் நேற்று முன்தினம் ஷாலினியை வழிமறித்துத் தகராறில் ஈடுபட்டதுடன், இரண்டு கத்திகளால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முனியராஜை ராமேசுவரம் துறைமுகப் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் விசாரணையில் முனியராஜ் அளித்த வாக்குமூலம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. “நான் ஒருதலையாக அவரைத் தீவிரமாகக் காதலித்தேன். என் நெஞ்சில் ஷாலினி என்று பச்சை குத்தியுள்ளேன். ஆனால், ஷாலினி ‘நான் படிக்க வேண்டும், உயர்கல்விக்குச் செல்ல வேண்டும்; என்னை பின் தொடர வேண்டாம். தொடர்ந்து தொந்தரவு கொடுத்தால் போலீசில் புகார் அளிப்பேன்’ என்று கூறியதால் ஆத்திரம் அடைந்தே கத்தியால் குத்திக் கொலை செய்தேன்” என்று முனியராஜ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, முனியராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் டிசம்பர் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
