கடலூர் மாவட்டம் வடலூர் – நெய்வேலி சாலையில், புறவழிச்சாலை பணிக்காகக் குவிக்கப்பட்டிருந்த மண் குவியலில் கைகள் கட்டப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்றை போலீசார் மீட்டனர். முக சிதைவுகளுடன் மீட்கப்பட்ட இப்பெண் குறித்து விசாரிக்க டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் மாயமான பெண்கள் குறித்து நடத்திய தீவிர விசாரணையில், துணி வியாபாரியான மஞ்சுளா (35) என்பவர், சென்னையில் உள்ள தனது மகளைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பியவர் வீடு வந்து சேரவில்லை என்பது தெரியவந்தது.

சடலமாக இருந்தது மஞ்சுளா தான் என்பதை அவரது கணவர் கண்ணன் உறுதி செய்ததை அடுத்து, கொலையாளியைப் பிடிக்க போலீசார் அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அதில், நெய்வேலி பகுதியில் மீன் வறுவல் கடை நடத்தி வரும் சம்பத் என்ற மீன் வியாபாரியுடன் மஞ்சுளா தொடர்ந்து பேசி வந்தது அம்பலமானது.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் மீன் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த சம்பத்தைப் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவருக்கும் மஞ்சுளாவிற்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததை ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று சென்னையில் இருந்து பேருந்தில் திரும்பிய மஞ்சுளாவை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி, அதிகாலை 3 மணியளவில் கண்ணுத்தோப்பு பாலம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரை உல்லாசத்திற்கு அழைத்தபோது மஞ்சுளா மறுத்ததுடன், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சம்பத், மீன் வெட்டும் கத்தியால் மஞ்சுளாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, உடலை மண் குவியலில் மறைத்துள்ளார். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் பெண்ணின் செல்போனை முட்புதரில் வீசியதாக வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, சம்பத்தை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.