சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள், வைகை ஆற்றில் மிதந்ததுடன் தொடர்புடைய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, உதவி வரைவாளரை கைது செய்தனர்.
திருப்புவனம் வட்டத்தில், கடந்த மாதம் 25 மற்றும் 26-ந்தேதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெற்றன. இதில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டன. அந்த முகாம்களில் பெற்ற 13 பட்டா மாறுதல் மனுக்கள், பின்னர் அதிகாரிகள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, நில அளவை பிரிவில் நிலுவையில் இருந்தன.
இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி, அந்த மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்து காணப்பட்டன. இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவ, மாவட்டமெங்கும் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, தாசில்தார் விஜயகுமார், திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதுடன், மனுக்களை பாதுகாக்க தவறியதாக சில ஊழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதன் அடிப்படையில், திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் உதவி வரைவாளராக பணியாற்றிய முத்துக்குமரன் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மனுக்களை வைகை ஆற்றில் வீசியதில், வேறு யார் தொடர்புடையவர்கள் இருக்கிறார்கள்?, எவர் தூண்டலின் பேரில் இந்த செயல் நடந்தது? என்பதற்கான விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
