தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவர் திருச்சியில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று சென்னை இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த நடிகர் விஜய், அங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி, திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார். இந்த நிலையில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான அமைச்சர் அன்பில் மகேஷ், இன்று செய்தியாளர்களிடம் பதிலளித்தார். அவர் பேசியதாவது, “2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தைத் தொடங்குவது சாதாரணமானதே. நாமும் பேசுவோம், மற்றவர்களும் பேசுவார்கள். ஆனால், விமர்சனம் தரவுகளுடன் இருக்க வேண்டும்,” என தெரிவித்தார்.

“நேற்று திருச்சியில் கூட்டம் நடந்ததாம், நான் அப்போது சென்னையில் இருந்தேன். இன்று காலை செய்திகளில் பார்த்தேன், விஜய் அவர்கள் ‘கேக்கலையா, கேக்கலையா’ என்று பேசியிருக்கிறார். இது கேலியல்ல. திருச்சியின் வளர்ச்சியை பாராட்ட மறுக்கும் நிலையை தான் இது காட்டுகிறது. நீங்கள் திருச்சியை சேர்ந்த பத்திரிகையாளர்கள்; இந்நகரத்தின் வளர்ச்சியை நேரில் பார்த்து உணர்ந்திருக்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிடினார்.

அதனைத் தொடர்ந்து, திமுக ஆட்சியில் திருச்சிக்கு கிடைத்த முக்கிய திட்டங்களை குறிப்பிட்ட அமைச்சர்,  “நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் முயற்சியில், பேரறிஞர் அண்ணாவின் பெயரில் 38 ஏக்கரில் ₹128 கோடியில் கனரக வாகன சரக்கு முனையம் அமைக்கப்பட்டுள்ளது.  தந்தை பெரியாரின் பெயரில் 22 ஏக்கரில் ₹236 கோடியில் காய்கறி மண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  கலைஞரின் பெயரில் ₹408 கோடி செலவில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது.

மேலும் இவை அனைத்தும் திருச்சியின் அபிவிருத்திக்கான தொடக்கச் செயல்கள் மட்டுமே. நீங்கள் விமான நிலையத்தில் இருப்பது போல வசதிகள் இருக்கின்றன என்று பாராட்டியீர்களே, இப்போது அதை மறுப்பது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பினார்.