வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் செயல்முறைகள்  தாமதமாக நீடிப்பதை தவிர்க்கும் நோக்கில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) வணிகப் பிரிவு புதிய வழிகாட்டுதலை அறிவித்துள்ளது.

அதன்படி, பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பிக்கும் நுகர்வோரிடம், முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் படிவம் 2-ஐ இனி கோர வேண்டிய அவசியமில்லை என்று அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பெயர் மாற்ற பணிகள் விரைவாக நிறைவேறுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனை, பங்கு பிரிப்பு, பரிசளிப்பு போன்ற வழிகளில் சொத்து உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளதானால், அப்போது விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, நீதிமன்ற தீர்ப்பு போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்று மற்றும் முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் கடிதம் தேவைப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், குடும்பத்தின் மூத்த உறுப்பினர் மரணமடைந்த நிலையில், பெயர் மாற்றத்திற்காக வாரிசு சான்றிதழ் அல்லது சமீபத்தில் பெறப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் இழப்பீடு பத்திரம் ஆகியவற்றை நுகர்வோர் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமைப் பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வணிகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.