தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அரசியலைத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறார் என்றும், அவர் நடனம் ஆடுவதிலேயே குறியாக இருக்கிறார் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் உரையாற்றிய கட்சியின் தலைவர் விஜய், வரும் தேர்தல்கள் குறித்துப் பேசுகையில்:

“தமிழகத்தில் மும்முனைப் போட்டி அல்லது நான்கு முனைப் போட்டி என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் எதார்த்தத்தில் மாபெரும் மக்கள் சக்தியாக நமது அணி ஒருபுறம் உள்ளது. மற்றொரு புறம் திமுக தலைமையிலான கூட்டணியும், அதற்கு அடுத்தபடியாக பாஜக தலைமையிலான அணியும் களத்தில் உள்ளன,” எனத் தெரிவித்தார்.

விஜய்யின் இந்த கருத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, விஜய்க்கு அரசியல் குறித்து எதுவுமே தெரியாது என்று நினைக்கிறேன். ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்னவென்று தெரியாமல், மூன்றாம் ஆண்டு விழாவில் அவர் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) பாஜக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கியக் கட்சிகளும், பல்வேறு விவசாய அமைப்புகளும் அங்கம் வகிக்கின்றன. இந்தக் கூட்டணி பலம் கூடத் தெரியாமல் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர் டான்ஸ் ஆடுபவர் என்றால், அதை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே? அரசியலுக்கு வந்துவிட்டு அடிப்படை விஷயங்களைக் கூடத் தெரிந்துகொள்ளாமல் பேசுவது முறையல்ல.

தமிழக அரசியலில் விஜய்யின் இந்த மும்முனைப் போட்டி குறித்த கருத்தும், அதற்கு பாஜக தரப்பிலிருந்து வந்துள்ள இந்த காட்டமான எதிர்வினையும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.