தமிழகம் முழுவதும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அது குறித்து மே மாதம் பதிவாகும் வெப்பநிலையை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று கூறினார். இந்நிலையில் கோடை விடுமுறையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் விடுமுறை என்பதால் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்து வருகிறார்கள். பொதுவாக தனியார் பள்ளிகள் விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது வழக்கம். ஆனால் விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று ஒவ்வொரு முறையும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் சில தனியார் பள்ளிகள் தற்போது கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் சென்றுள்ளது.

அதன்படி சென்னை மற்றும் நாமக்கல் உள்ளிட பல்வேறு பகுதிகளில் சிலர் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக கூறப்படுவதால் பள்ளிக்கல்வித்துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை பிறப்பித்துள்ளது. அதாவது கோடை விடுமுறையில் கண்டிப்பாக சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மேலும் இந்த உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. இந்த உத்தரவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.