மத்திய அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையைத் தமிழக அரசு அலட்சியப்படுத்தி வருவதால், மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக மத்தியப் படைகளைத் தமிழகத்தில் குவிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

“மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் நாடு தழுவிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த எச்சரிக்கையை முற்றிலும் அலட்சியப்படுத்தி வருகிறது.

திமுகவின் கூட்டணிக் கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சில அடிப்படைவாத அமைப்புகள் ஈரானுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் போராட்டம் நடத்தத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. காஷ்மீரில் இந்தியர்கள் கொல்லப்பட்டபோதோ அல்லது வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டபோதோ மவுனம் காத்த இந்த அமைப்புகள், இப்போது இந்தியாவுடன் நேரடித் தொடர்பில்லாத ஒரு விவகாரத்திற்காகத் தெருவில் இறங்கிப் போராடுவது ஏன்?

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருந்த மார்ச் 1-ம் தேதி, சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட இந்த அமைப்புகள் முயன்றது கடும் கண்டனத்துக்குரியது. இது போன்ற பிரிவினைவாத மற்றும் அடிப்படைவாத அமைப்புகளுடன் இணைந்து திமுக அரசு தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுவது கவலையளிக்கிறது.

மேலும், துபாய், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த நாடுகளுக்கு எதிராக ஈரான் தாக்குதல் நடத்தும்போது மவுனமாக இருக்கும் இந்த அமைப்புகள், இப்போது வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்படுவது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.

தமிழக அரசு மத்திய அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையை மீறியுள்ளதால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்தியப் பாதுகாப்புப் படைகளை உடனடியாகத் தமிழகத்தில் குவிக்க வேண்டும்.

மேலும், தமிழக முதல்வர், தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு, சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டவும், பிரிவினைவாதப் போராட்டங்களைத் தடுக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.