தமிழகத்தில் ‘கூட்டணி ஆட்சி’ மற்றும் ‘ஆட்சியில் பங்கு’ குறித்த விவாதம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே சூடுபிடித்துள்ள நிலையில், “தமிழகத்தில் இப்போது நடப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை; இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது: “ஜனநாயகத்தில் கருத்துச் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆட்சியில் பங்கு இல்லை என்பது அமைச்சர் ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து. இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அமர்ந்து பேசி முடிவெடுப்பார்கள். இதில் அமைச்சர்கள் முடிவெடுக்க முடியாது.” என்றார்.
அப்போது செய்தியாளர்கள், “தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி எப்போது அமையும்?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த செல்வப்பெருந்தகை, “தமிழகத்தில் இப்போது நடப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்” என்று கூறி அதிர வைத்தார். அதாவது, திமுக அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் காங்கிரஸின் சித்தாந்தத்தைப் பிரதிபலிப்பதாக அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டாலும், இது திமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக ‘அதிகாரப் பகிர்வு’ குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வரும் நிலையில், செல்வப்பெருந்தகையின் இன்றைய பேட்டி, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
