தமிழகத்தில் கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட 11 நகரங்களில் பிரதமரின் இ பஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 100 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நகரங்கள் இதனை ஒட்டிய பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விதமாக போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இருசக்கர வாகனங்கள் முதல் பேருந்துகள் வரை மின்சார வாகனங்கள் வந்துள்ளதால் பெட்ரோலிய பொருட்கள் பயன்பாடு மற்றும் மாசு குறைப்புக்கு இது பெரும் உதவியாக உள்ளது. இந்த நிலையில் சில தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் இ பஸ் சேவையை தொடங்கியுள்ளன.

இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பிரதமரின் இ பஸ் என்ற பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 169 நகரங்களில் 10 ஆயிரம் இ பேருந்துகள் இயக்க 20000 கோடி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் மூன்று லட்சத்திற்கும் மேலான மக்கள் வசிக்கும் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் முதல் கட்டமாக கோவை, மதுரை , திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ஆவடி, அம்பத்தூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.