தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாதம் தோறும் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாதம் ஹரிதாஸ் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தத் திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நிலையில் ஆண்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளின் வளர்ப்பை முன்வைத்து எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடுவதற்கு முன்பு அந்த படத்தை பார்க்க வேண்டும். அதன் பிறகு கதை சுருக்கத்தையும் படித்து மாணவர்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.