SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  திராவிட முன்னேற்றக் கழகம் 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது  பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார்கள். அதில் ஒன்று சிறையில் வாடுகின்ற இஸ்லாமியர்களை விடுதலை செய்யப்படும் என்ற ஒரு வாக்குறுதி. ஆட்சிக்கு வந்த பிறகு காற்றிலே பறக்க விட்டு விட்டார்கள் அவருடைய வாக்குறுதிகளை....

42 அப்பாவி இஸ்லாமியர்கள் 25 காலமாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வாடிக் கொண்டிருப்பவர்களை இந்த அரசு விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக…..  மாண்புமிகு அம்மாவினுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி,  தமிழக சட்டமன்றத்திலே நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை  கொண்டு வந்தோம். அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலமாக…. அவர்களுக்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி,  சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்ற இஸ்லாமிய சகோதரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று  கோரிக்கை வைத்தோம்.

அப்பொழுது பேசுகிறார் திரு. ஸ்டாலின்…..  திடீரென்று எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்படி இஸ்லாமியர் மீது பாசம் பொங்குகிறது என்று சொன்னார். திரு.ஸ்டாலின் அவர்களே…. ஏற்கனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கிலே ஏழு பேர் குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் சிறையில் இருந்தார்கள். சிறையில் வாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்னிடத்தில் கோரிக்கை வைத்தார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, முதலில் பரோலில் விட்டோம்.  பிறகு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று,  தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கட்சி அண்ணா திமுக கட்சி, அண்ணா திமுக அரசாங்கம்.

அதே வேளையில் திரு. கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்….  அப்பொழுது அந்த அமைச்சருக்கு கூட்டம் நடைபெற்றது. அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த அமைச்சரவை கூட்டத்திலே…..  திரு. கருணாநிதி அவர்கள் தலைமையிலே நடந்த அமைச்சரவை கூட்டத்திலே எடுக்கப்பட்ட முடிவு திருமதி நளினிக்கு பெண் குழந்தை இருக்கின்ற காரணத்தினாலே…. அவர்களுடைய தண்டனை குறைக்கலாம்.

மற்றவர்களுக்கெல்லாம் நீதிமன்றம் அளித்த தண்டனை நிறைவேற்றலாம் என்று அமைச்சரவையில் முடிவெடுத்தார்கள். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  பிறகு  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர்கள் விடுதலை செய்கின்ற சூழ்நிலை வரும் பொழுது….  அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். யாரை விடுதலை செய்யக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினார்களோ,  அந்த கட்சி சேர்ந்தவர்களே….  அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நாடகத்தை அரங்கேற்றிய கட்சி  திமுக கட்சி, இன்றைய  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். ஆனால் நாங்கள்  அப்படி இல்லை.

இன்றைக்கு  சிறையில் வாடிக் கொண்டிருக்கின்ற இஸ்லாமிய சகோதரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிற பொழுது….  ஏன் ஆதரிக்க மறுக்கின்றீர்கள். 2021 சட்டமன்ற பொதுதேர்தலின் போது சிறுபான்மை மக்களுக்கு  வாக்குறுதி கொடுத்தீர்களே…. அதை தானே நாங்கள் கேட்கிறோம். இருப்பினும் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரும்பொழுது…..  சிறையில் வாடிக் கொண்டிருக்கின்ற இஸ்லாமிய சகோதரர்களுக்கு விடுதலை செய்வதற்கு நாங்கள் முயற்சி எடுப்போம். நாங்கள் எதைச் சொன்னாலும் அதை சாதித்துக் காட்டக்கூடிய கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சி என பேசினார்.