கும்பகோணத்தில் இருந்து பெங்களூரு நோக்கி பயணித்த ஆம்னி பேருந்து திருச்சி அருகே கவிழ்ந்ததில் 21 பயணிகள் காயமடைந்தனர். கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு டிரைவர் உட்பட 31 பேருடன் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்து பெங்களூரு சென்ற நிலையில் இன்று அதிகாலையில், அந்த பேருந்து திருச்சி மாவட்டம் சிலையாத்தி அருகே திருச்சி–நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், பேருந்து சாலையோரத்தில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய பயணிகள் உயிர் பயத்தில் அலறிய நிலையில், அப்பகுதி இளைஞர்கள் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் பேருந்தில் இருந்த 31 பேரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். இதில் 21 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.