கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த செல்வம் (35) என்ற மாற்றுத்திறனாளி, கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக கடந்த ஒரு ஆண்டாக தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வரலாறு மற்றும் புவியியல் பாடங்களை கற்பித்து வந்த இவர், தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக அதே பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பள்ளிக்கு சென்று, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போதும், மாணவிகள் ஆசிரியர் செல்வம் மீது குற்றச்சாட்டுகளை மீண்டும் உறுதிப்படுத்தினர். பின்னர் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் செல்வத்தை கைது செய்தனர். அவர்மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.