திமுக கூட்டணியில் நீடிப்பது காங்கிரஸிற்குப் பிடிமானமாக இல்லையென்றால், அவர்கள் தாராளமாகத் தனியாக நின்று தங்கள் பலத்தைக் காட்ட வேண்டியதுதானே என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் திமுகவிடம் அதிக இடங்களைப் பேரம் பேசுவதற்காகவே இத்தகைய அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்களே தவிர, ஒருபோதும் கூட்டணியை விட்டு வெளியே வரமாட்டார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், நடிகர் விஜய்யுடன் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் கூட்டணி வைப்பது குறித்துக் கேட்டபோது, அது அவரவர் விருப்பம் என்றும், ஜனநாயத்தில் யாரும் யாருடனும் கூட்டணி வைக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

​தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்துப் பேசிய சீமான், தேர்தல் வருவதால் மட்டுமே இத்தகைய அறிவிப்புகள் வெளியாகின்றன என்று சாடினார். ஏற்கனவே அரசு பல லட்சம் கோடி கடனில் இருக்கும்போது, தற்போது மீண்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுவது வெறும் தேர்தல் கால அரசியல் தந்திரமே தவிர, மக்கள் நலன் சார்ந்ததல்ல என்று அவர் குற்றம் சாட்டினார். சீமானின் இந்த அதிரடிப் பேட்டி தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.