பொதுவாக சாலை விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் தான் விபத்துகளை தடுக்க முடியும். ஆனால் பலர் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பது கிடையாது. நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் கூட அதிகம் தான். தலைக்கவசம் உயிர்க்கவசம் என்கிறார்கள். தற்போது திருமணத்தில் ஒரு ஜோடி இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக செய்த விஷயம் சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகிவரும் நிலையில் பலரும் அந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதாவது சதீஷ்கர் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரேந்திரன் மற்றும் ஜோதி சாஹூ தம்பதியருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் முதலில் மோதிரம் மாற்றிக் கொண்டனர். பின்னர் மாலையை மாற்றுவதற்கு பதிலாக இருவரும் ஹெல்மெட்டை மாற்றிக் கொண்டனர். பின்னர் அவர் தன்னுடைய திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் விபத்தை தடுக்க அனைவரும் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதாவது அவருடைய தந்தை கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது. மேலும் இதன் காரணமாகத்தான் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தன் திருமண நிகழ்ச்சியில் அப்படி செய்துள்ளார்.
