மும்பையில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் சாலைப் போக்குவரத்து, புறநகர் ரயில் சேவை மற்றும் விமானப் போக்குவரத்து என அனைத்தும் பெரும் முடக்கத்தைச் சந்தித்துள்ளன.

இந்தச் சூழலில், மும்பையின் கஞ்சூர்மார்க் ரயில் நிலையப் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியிருந்த போதிலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாகச் சென்றபோது, தண்டவாளத்தில் இருந்த தண்ணீர் இருபுறமும் உள்ள பாலங்களில் சென்ற வாகனங்கள் மீது பீய்ச்சியடித்த காட்சி காண்போரை அதிர வைத்துள்ளது. இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து, மும்பையின் மழையிலும் தளராத வேகத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இருப்பினும், இந்த வீடியோ சில கவலைகளையும் எழுப்பியுள்ளது. ஆண்டுதோறும் பெய்யும் மழையைச் சமாளிக்கத் தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை என்பதைப் பல பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கனமழை காரணமாக ரயில் சேவைகளின் வேகம் குறைக்கப்பட்டும், விமான சேவை சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டும் பயணிகளுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டது.

“>

மழைக்காலங்களில் ரயில் சேவைகளைப் பாதுகாப்பாக நடத்துவது அவசியம் என்றாலும், இத்தகைய அசௌகரியங்களைத் தவிர்க்க அரசு நிரந்தரமான தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.