உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் பகுதியில், கனமழையினால் தண்ணீர் தேங்கியிருந்த சாலையைக் கடக்க முயன்ற 28 வயது பாதுகாப்பு ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்த பப்லு என்ற அந்த இளைஞர், அங்குள்ள ஒரு குடியிருப்பில் பாதுகாப்பு ஊழியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். வியாழக்கிழமை மதியம் சுமார் 3:20 மணியளவில் அவர் தேங்கியிருந்த தண்ணீரில் நடந்து சென்றபோது, மின்சாரம் பாய்ந்ததால் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.

“>

இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால், அருகில் இருந்த பொதுமக்களால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை. பின்னர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகே, பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள எல்.ஒய்.எஃப் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மின்சாரக் கட்டமைப்பைப் முறையாகப் பராமரிப்பதில் ஏதேனும் அலட்சியம் இருந்ததா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.