மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நந்தினியும், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பந்தே நவாஸ் என்பவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களின் காதலுக்கு நந்தினியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது குடும்பத்தினரின் முடிவின்படி நந்தினி வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்ததால் ஆத்திரமடைந்த காதலன், கடந்த வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் நந்தினியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
மேலும் வீட்டிற்குள் நுழைந்த பந்தே நவாஸைத் தடுக்க நந்தினியின் சகோதரர்களும் குடும்பத்தினரும் முயன்றபோது, சமையலறைக்குச் சென்ற அவன் அங்கிருந்த எல்பிஜி சிலிண்டரைத் திறந்து வீட்டை வெடிக்கச் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளான்.
இதனால் பயந்துபோன குடும்பத்தினரை ஒரு அறைக்குள் பூட்டிவிட்டு, நந்தினியின் கழுத்து, கைகள், விலா எலும்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளான். நந்தினியைத் தாக்கிய பிறகு, பந்தே நவாஸ் அதே கத்தியால் தனது சொந்தக் கழுத்தையும் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளான்.
தற்சமயம் படுகாயமடைந்த நந்தினியும், குற்றவாளி பந்தே நவாஸும் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வர்த்தூர் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
