கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வரும் 18ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளார். அப்போது வாகன பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் இந்த பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஜெ.ரமேஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் இந்த பேரணிக்கு அனுமதி கோரி போலீசாரிடம் விண்ணப்பித்த நிலையில், அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. எனவே பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனு என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி, 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணிக்கு திட்டமிட்டுள்ளதாக கூறினார். நாடு முழுவதும் காவல்துறை அனுமதி பெற்று இதுபோன்ற பேரணி நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறினார். காவல்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் விஜயன் ஆஜராகி, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மறுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இது போன்ற பேரணிகளுக்கு எந்த கட்சிக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து அனுமதி கொடுப்பதற்கு என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பிய நீதிபதி, பாதுகாப்பு விவகாரத்தை பிரதமர் பாதுகாப்பு குழுவானது, சிறப்பு பாதுகாப்பு படை கவனித்துக் கொள்ளும் என்றும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் அவர்களே எப்படி பேரணிக்கு ஒப்புதல் அளித்து இருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் பேரணிக்காக தங்களிடம் தடையில்லா சான்றிதழ் கேட்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு விவகாரத்தில் மாநில காவல் துறைக்கும் சமமான பொறுப்பு இருப்பதாக கூறினார்.

இதனையடுத்து பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதி, பேரணி செல்லக்கூடிய சாலை, தூரம், எந்த நேரம் ஆகியவற்றை காவல்துறை முடிவு செய்து செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் பதாகைகள் வைப்பதற்கு அனுமதி இல்லை என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.