மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், 33 வயதான ட்விஷா சர்மா என்ற பெண் கடந்த மே 12 அன்று அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் மே 13 முதல் போபால் எய்ம்ஸ் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக உடல் அங்கு வைக்கப்பட்டுள்ளதால், அது அழுகத் தொடங்கும் அபாயம் உள்ளதாகக் கூறி உடலை உடனடியாகப் பெற்றுச் செல்லுமாறு காவல்துறை அவரது குடும்பத்தினருக்கு கடிதம் எழுதியுள்ளது.
இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு ட்விஷா தனது கணவர் வீட்டில் வரதட்சணை கொடுமை மற்றும் மன ரீதியான சித்திரவதைகளை எதிர்கொண்டதாகக் குற்றம் சாட்டும் அவரது குடும்பத்தினர், உடலை வாங்க மறுத்து வருகின்றனர். ட்விஷாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகக் கூறும் அவரது குடும்பத்தினர், இரண்டாவது பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
மேலும் முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ட்விஷாவின் கழுத்தில் இரட்டைக் கயிற்றின் தழும்புகள், கைகள், மணிக்கட்டு மற்றும் தலையின் உட்பகுதியில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மரணத்திற்கு முன்பு ஏற்பட்ட பலத்த காயம் என்று மருத்துவக் குழு குறிப்பிட்டுள்ளதால், இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று குடும்பத்தினர் வாதிடுகின்றனர்.
இந்த வழக்கில் முறையான விசாரணை கோரி அவர்கள் குடியரசுத் தலைவர் மற்றும் நாட்டின் தலைமை நீதிபதி ஆகியோரிடம் மனு அளித்துள்ளதோடு, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஒரு சுதந்திரமான விசாரணை முகமை மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
