காரைக்கால் மற்றும் பேரளம் இடையே சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயணிகள் ரயில் போக்குவரத்து இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்தப் பாதையில் கடந்த ஓராண்டாகச் சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் பயணிகள் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த வழித்தடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருநள்ளாறு ரயில் நிலையத்திற்குப் பயணிகள் ரயில் வந்து சேர்ந்தபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் மலர்கள் தூவியும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த புதிய ரயில் சேவை ஆன்மீகப் பயணிகளுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக அமையும் என்பதால் காரைக்கால் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
