சிறுவன் ஒருவனுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் போது, பயிற்சியாளர் ஒருவர் மிகக் கடுமையான முறையில் லெதர் பந்தை அவன் மீது வீசும் வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பயிற்சியாளர் பந்தை வேகமாக வீசும்போது அந்த சிறுவன் அதைப் பிடிக்க முடியாமல் கைகளில் அடிவாங்கித் தவிக்கிறான். “நீ பயந்தால் நான் உன்னை அடிப்பேன்” என்று அந்த பயிற்சியாளர் எச்சரிக்கும் சத்தம் கேட்பது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறையற்ற பயிற்சியால் சிறுவனின் கைகளில் எலும்பு முறிவு அல்லது பலத்த காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
This is child abuse not coaching pic.twitter.com/6x77Lid5yG
— desi mojito (@desimojito) February 22, 2026
இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கு ஆதரவாகவும் சில கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. லெதர் பந்து கிரிக்கெட் என்பது மிகவும் சவாலானது என்றும், மைதானத்தில் அதிவேகமாக வரும் பந்துகளை எதிர்கொள்ள கைகளையும் மனதையும் வலிமையாக்க இத்தகைய கடினமான பயிற்சிகள் அவசியம் என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். தற்காப்புக் கலைகளில் கைகளை உறுதிப்படுத்தக் கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுவது போல, இதுவும் ஒரு வகை பயிற்சிதான் என்று அவர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ, விளையாட்டுத் துறையில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு முக்கியமா அல்லது இத்தகைய கடுமையான ஒழுக்க முறைகள் அவசியமா என்பது குறித்த விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது.
