ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் விமானி ஒருவரை மீட்பதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், அந்த விமானியின் தாயாருக்கு ஈரான் தூதரகம் அளித்துள்ள பதில் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலில், அமெரிக்காவின் இரண்டு அதிநவீன F-15 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த விமானங்களில் இருந்த இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் ஈரானிய எல்லைக்குள் குதித்தனர். இதில் ஒருவரை இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை மீட்ட நிலையில், மற்றொரு விமானி ஈரானின் பிடியில் சிக்கியுள்ளார். அவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாயமான அந்த அமெரிக்க விமானியின் தாயார் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட உருக்கமான செய்தி அனைவரையும் கலங்கச் செய்தது. ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களை இயக்கிய என் மகனுக்காகவும், மற்ற வீரர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். என் மகனைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. என் இதயம் கனத்துப் போயுள்ளது என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இந்தத் தாயின் பதிவிற்குப் பதிலளித்துள்ள பாகிஸ்தானில் உள்ள ஈரான் தூதரகம், மிகவும் நுட்பமான அதே சமயம் எச்சரிக்கை கலந்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில்,  உயிருக்குப் போராடும் உங்கள் மகன், அதிபர் டிரம்ப்பின் பிடியில் இருப்பதை விட ஈரானின் காவலில் இருப்பதுதான் அதிக பாதுகாப்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அமெரிக்க மீட்புக் குழுக்கள் அவரைக் கண்டுபிடிப்பதை விட, ஈரான் ராணுவத்திடம் அவர் பிடிபட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். முஸ்லிம்களாகவும், நாகரிகமான ஈரானியர்களாகவும் கைதிகளை எப்படி கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விமானியைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம், டிரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மறுபுறம், தனது வீரரை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. ‘கடுமையான போர்ச் சூழலுக்கு நடுவே, ஒரு தாயின் பாசப் போராட்டமும், இரு நாடுகளின் அதிகாரப் போட்டியும் இந்த விமானியைச் சுற்றியே மையம் கொண்டுள்ளன.

மேலும் இதற்கிடையில் தற்போது அந்த விமானியை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டதாகவும் அவருடைய அடையாளத்தை ரகசியமாக வைத்திருப்பதாகவும் தற்போது ஈரானிலிருந்து பாதுகாப்பாக வெளியே வருவதற்கு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.