மேற்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழிப் பாதையில், ஈராக் நாட்டு கப்பல்களுக்கு மட்டும் முழுமையான வரி விலக்கு மற்றும் பயண அனுமதியை ஈரான் அறிவித்துள்ளது. போர் காலங்களில் ஈரான் மக்களுக்கு ஈராக் காட்டி வரும் ஆதரவிற்கு கைமாறாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது.

இது குறித்து IRGC செய்தித் தொடர்பாளர் ஜெனரல் இப்ராஹிம் ஜோல்ஃபகாரி கூறுகையில், “இந்த இக்கட்டான போர்ச் சூழலில் ஈராக் மக்கள் எங்களோடு தோளோடு தோள் நின்று பலத்தை அளித்துள்ளனர். அவர்களின் உறுதியான ஆதரவை ஈரான் உணர்கிறது. இறைவனின் பெயரால், எங்களது சகோதரத்துவ நாடான ஈராக்கின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித தடையுமின்றி கடக்கலாம். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் எதிரி நாடுகளுக்கு மட்டுமே என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட சில நிபந்தனைகளின் அடிப்படையில் இப்பாதையைப் பயன்படுத்தி வரும் நிலையில், நிபந்தனையற்ற அனுமதியைப் பெறும் முதல் நாடாக ஈராக் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பேசிய இப்ராஹிம், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இத்தாக்குதல்கள் ஈரானின் இறையாண்மைக்கு எதிரானது என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

மற்றொரு புறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்பட 48 மணி நேரம் காலக்கெடு விதித்துள்ள அவர், அதற்குள் தீர்வு காணப்படாவிட்டால் ஈரான் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

தற்போது ஈரானின் புஷெர்  அணுசக்தி நிலையத்தை இலக்கு வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. மேலும் இதனால் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.