இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் தள்ளுவண்டிகளில் மிகச் சாதாரண விலைக்குக் கிடைக்கும் கரும்புச் சாறு, தற்போது ஐரோப்பிய நாடுகளின் வீதிகளில் ஒரு ‘பிரீமியம்’ பானமாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இந்தியர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் @prabhuvisha என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஐரோப்பாவின் ஒரு முக்கிய வீதியில் கரும்புச் சாறு விற்பனை செய்யப்படுகிறது. வியப்பு என்னவென்றால், கரும்புச் சாறு பிழியும் இயந்திரம் முதல் அதைத் தயாரிக்கும் விதம் வரை அனைத்தும் அப்படியே இந்திய பாணியிலேயே உள்ளது. ஆனால், அங்கு சாறு வாங்குவதற்கு வெளிநாட்டவர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
View this post on Instagram
இந்தியாவில் ஒரு கிளாஸ் கரும்புச் சாறு ரூ.20 முதல் ரூ.40 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ஐரோப்பாவில் இதன் விலை சுமார் 5 யூரோ எனத் தெரிகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 535 ரூபாய் ஆகும். சாதாரண கரும்புச் சாறு வெளிநாட்டிற்குச் சென்றதும் ‘பிரிமீயம் டிரிங்க்’ ஆக மாறி, இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்படுவதைக் கண்டு இந்திய நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.
சில இடங்களில் இந்த கரும்புச் சாற்றை ‘காக்டெய்ல்’ (Cocktail) பாணியில், கூடுதல் அலங்காரங்களுடன் மிகவும் நவீனமாகப் பரிமாறுகின்றனர். இதனைப் பார்த்த பலரும், “நம்ம ஊரு கரும்புச் சாறு இவ்வளவு ‘அப்கிரேட்’ ஆகிவிட்டதா?” என நகைச்சுவையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் கரும்புச் சாறு விற்பனை என்பது புதிய விஷயமல்ல என்றாலும், தற்போது இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
