டெல்லி: டிண்டர் என்ற டேட்டிங் ஆப்பில் காதலித்து, முதன்முறையாக நேரில் சந்தித்த ஒரு பெண்… ஆனால் அந்த சந்திப்பு கடைசியில் ரூ.50,000-க்கும் மேல் ஏமாற்றப்பட்ட சம்பவத்தால், அதிர்ச்சியில் சிக்கியுள்ளார் டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.

ரெடிட் என்ற இணைய தளத்தில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அந்த இளைஞர். “ஒரு பெண்ணுடன் டிண்டர் மூலம் நட்பு ஏற்பட்டது. நல்ல உரையாடலுக்குப் பிறகு, கட்கடூமா பகுதியில் உள்ள ஒரு கஃபே-யில் சந்திக்க முடிவு செய்தோம். ஆரம்பத்தில் எல்லாமே சரியாகவே போனது. ஆனால், சற்று நேரத்தில் விலை அதிகமான உணவுகளைத் தான் கொண்டு வந்தார்கள். மெனு கூட காட்டவில்லை. கடைசியில், சாப்பிட்டதற்காக மட்டும் ரூ.50,000 பில் கேட்டார்கள்!” என கூறியுள்ளார்.

மேலும், இது திட்டமிட்ட மோசடியாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த அவர், “டிண்டர் போன்ற ஆப்ஸ்களில் சேர்ந்து, இந்தக் கஃபே போன்ற இடங்களுக்கு அழைத்து மோசடி செய்கிறார்கள். இனி யாரும் இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஆளாகக் கூடாது என்பதற்காகத்தான் நான் இதை பகிர்கிறேன்” என எச்சரிக்கையுடன் எழுதியுள்ளார். தற்போது இந்த அனுபவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.