நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் 26-ஆம் தேதி தலைநகர் டெல்லியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி கடமைப் பாதையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் கலாசாரப் பெருமையை நிலைநாட்டும் வகையில் அணிவகுப்புகள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டு விழாவில் பங்கேற்க சுமார் 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஊர்சுலா வான் டெர் லெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க உள்ளனர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ள “தேடப்படும் குற்றவாளிகள்” குறித்த எச்சரிக்கை போஸ்டர்களில், முதல்முறையாக அல்-கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த முகமது ரேஹான் என்ற அந்த நபர், இந்தியத் துணைக்கண்டத்தில் செயல்படும் அல்-கொய்தா (AQIS) அமைப்பின் தீவிர உறுப்பினர் என்றும், உளவு அமைப்புகளால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இவரைக் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்கும் வகையிலும் இந்தப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ள நிலையில், டெல்லி முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடமைப் பாதை மற்றும் டெல்லி மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் தொழில்நுட்பம் சார்ந்த நவீனக் கருவிகள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முக அடையாளத்தைக் கண்டறியும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விரிவான சோதனைகளுக்குப் பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டின் இறையாண்மையைக் காக்கவும், குடியரசு தின விழா எவ்வித இடையூறுமின்றி நடைபெறவும் டெல்லி போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் இணைந்து தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
