திருமண உறவுகள் சமீபகாலமாக வன்முறை மற்றும் சட்டச் சிக்கல்களால் சிதைந்து வரும் நிலையில், ஹரியானா மாநிலம் ரேவாரியில் ஒருவரது வீட்டிற்குள் புகுந்து மனைவியின் உறவினர்கள் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஒரு தம்பதியிடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மனைவி தனது பிறந்த வீட்டாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட உறவினர்களுடன் வந்த மனைவியின் குடும்பத்தினர், கணவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அங்கு கணவர் மற்றும் அவரது முதிய பெற்றோரைத் தடிகளாலும், கூர்மையான ஆயுதங்களாலும் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், வீட்டிலிருந்த அலமாரிகளை உடைத்து அங்கிருந்த நகைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றதாகப் பாதிக்கப்பட்ட கணவர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
A case of domestic discord in Dharuhera, Rewari, allegedly escalated into a violent family feud after the wife reportedly called nearly 25 members of her parental family to her matrimonial home. The husband’s family has accused the in-laws of trespassing, attacking them with… pic.twitter.com/amhSqW9E16
— Ekamnyaay (@ekamnyaay) January 21, 2026
இந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், வன்முறை நடக்கும்போது சம்பவ இடத்திலிருந்த போலீஸார், அதனைத் தடுக்காமல் மௌன சாட்சிகளாக வேடிக்கை பார்ப்பதாகக் கணவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். “போலீஸார் முன்னிலையிலேயே எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வீட்டைச் சேதப்படுத்திவிட்டு, நகைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பிச் செல்ல போலீஸார் அனுமதித்தனர்,” எனப் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
ஆண்கள் நலனுக்காகப் பணியாற்றும் ‘ஏகம் நியாய் அறக்கட்டளை’ (Ekam Nyay Foundation) இந்த வீடியோவைப் பகிர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் ஆண்களின் மனநிலையைப் பெரிதும் பாதிப்பதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இணையவாசிகள் பலரும், “தற்போதைய காலக்கட்டத்தில் திருமணம் என்பது ஆண்களுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறி வருகிறது” என்றும், “ஆண்கள் சட்டத்தின் மூலம் மிரட்டப்படுகிறார்கள்” என்றும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள ஒரு பயனர், “வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகச் சட்டம் இருப்பது போல, நிரபராதி ஆண்கள் விவாகரத்தின்போது பணம் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்படுவதையும் தடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற போலி வழக்குகள் குறையும்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் மெத்தனப் போக்கு குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
