டெல்லி கடமைப் பாதையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) ஆண்கள் பிரிவை ஒரு பெண் அதிகாரி தலைமை தாங்கி வழிநடத்த இருப்பது நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், நவ்ஷேரா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சிம்ரன் பாலா (26). இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி. (UPSC) தேர்வில் வெற்றி பெற்று, சி.ஆர்.பி.எப். படையில் உதவி கமாண்டன்டாகப் பணியில் சேர்ந்தார். மிகக் குறுகிய காலத்திலேயே தனது திறமையால் ஒரு முக்கியப் பொறுப்பை இவர் எட்டியுள்ளார்.

வழக்கமாக ராணுவ மற்றும் துணை ராணுவப் படைகளின் ஆண்கள் பிரிவை அந்தந்தப் பிரிவின் ஆண் அதிகாரிகளே வழிநடத்துவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சி.ஆர்.பி.எப். படையைச் சேர்ந்த 140 வீரர்கள் அடங்கிய அணிவகுப்பை, உதவி கமாண்டன்ட் சிம்ரன் பாலா தலைமை தாங்கி வழிநடத்த உள்ளார்.

முதல்முறையாக ஆண்கள் படையைப் பெண் அதிகாரி ஒருவர் வழிநடத்திச் செல்வது, பாதுகாப்புப் படைகளில் பெண்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தையும், அவர்களின் தலைமைத்துவப் பண்பையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

“கடமைப் பாதையில் சிம்ரன் பாலாவின் கம்பீர நடை, ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள இளம் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும்” என்று மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் பெருமை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆயுதப் படைகளின் வலிமையை உலகுக்குக் காட்டும் இந்த அணிவகுப்பில், ஒரு பெண் அதிகாரி முன்னின்று செல்வதை நேரலையில் காண தேசமே மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறது.