தெலுங்கானா மாநிலத்தின் கும்பமேளா என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ‘மேடாரம் சம்மக்கா சாரலம்மா’ ஜாத்திரை திருவிழாவில், நடிகை ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்குத் துலாபாரம் வழங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் மேடாரம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ஜாத்திரை வரும் 28-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் தங்களது எடைக்கு நிகரான வெல்லத்தை ‘துலாபாரம்’ நேர்த்திக்கடனாக வழங்குவது பல நூற்றாண்டுகால பாரம்பரிய வழக்கமாகும்.
இந்நிலையில், ‘கமிட்டி குர்ரால்லு’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை டீனா ஸ்ராவ்யா, சமீபத்தில் இக்கோயிலுக்குச் சென்றார். அங்கு அவர் செய்த காரியம் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துலாபாரம் வழங்கும் தராசின் ஒரு தட்டில் தனது வளர்ப்பு நாயை அமரவைத்து, மறுபுறம் வெல்லத்தை வைத்து அவர் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பழங்குடியின மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தங்கள் குலதெய்வங்களாகப் போற்றப்படும் சம்மக்கா சாரலம்மாவை நடிகை அவமதித்துவிட்டதாகவும், புனிதமான வழிபாட்டுத் தலத்தில் விலங்குகளை வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன.
சர்ச்சை முற்றிய நிலையில், நடிகை டீனா ஸ்ராவ்யா வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “எனது செல்ல நாய் சமீபத்தில் கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டது. அது குணமடைய வேண்டும் என்பதற்காக நான் துலாபாரம் வழங்குவதாக வேண்டிக்கொண்டேன். அந்தப் பக்தியின் காரணமாகவே இந்த நேர்த்திக்கடனைச் செலுத்தினேன். பழங்குடி மரபுகளை அவமதிக்கும் எண்ணம் எனக்குச் சிறிதும் இல்லை. இருப்பினும், எனது செயல் பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.”
மேலும் இந்த விளக்கத்திற்குப் பிறகும், வழிபாட்டு முறைகளில் இத்தகைய மாற்றங்களைச் செய்வது மரபுகளைச் சிதைக்கும் செயல் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
