அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறித்தும், தற்போது நடப்பிலுள்ள அரசியல் நிலைமை குறித்தும் முக்கியமான கருத்துகளை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:  “தன்னை நம்பி வந்தவர்களை பாதி வழியில் கழட்டி விடுவது தான் எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கமான நடைமுறை. இதற்குச் சமீபத்தில் புதுடெல்லியில் நடந்த அவரது செயல்பாடே எடுத்துக்காட்டாக உள்ளது. அவர்  பாஜக தான் அ.தி.மு.க-வின் 4 ஆண்டுகள் ஆட்சியை காப்பாற்றியது என்று கூறுகிறார். அப்படி என்றால், அந்த பாஜகவையே நாடாளுமன்றத் தேர்தலில் கழட்டி விட்டது எதற்காக? தன்னை நம்பியவர்களுக்குத் துரோகம் செய்வது, பழனிசாமியின் கைவந்த கலை. இனி, அ.தி.மு.க தொண்டர்கள் விழித்து கொள்ள வேண்டும். எப்போது வேண்டுமானாலும், யாரையும் கழட்டி விடக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி.” மேலும் முகத்தை மூடிக்கொண்டு வந்தாலே வெட்கப்பட்டு அசிங்கப்பட்டு வருகிறார்கள் என்று தான் அர்த்தம். அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிந்ததும் எடப்பாடி பழனிச்சாமி தன்மானத்தை பற்றி பேசுகிறார்.

“அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியே இவருக்கு முக்கியம். ஆட்சி முக்கியமல்ல எனத் திறம்பட சொல்லக்கூடியவர். இவரால் எந்த கூட்டணியையும் ஆட்சிக்கு கொண்டு வர முடியாது. தற்போது, எடப்பாடி பழனிசாமி அரசியல்வாதிகளில் தனது முகத்தை கூட காட்ட முடியாமல் கைக்குட்டையால் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பொதுச்செயலாளர் பதவியை வைத்துக்கொண்டு அ.தி.மு.க-வைக் பா.ஜ.க-விடம் அடகு வைத்து விட்டார். இதனை அ.தி.மு.க தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.”

அதனைத்தொடர்ந்து, நடிகர் விஜயின் சமீபத்திய பிரசார பயணம் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். “நிபந்தனைகளைப் பின்பற்றாமல் விஜயின் பிரசாரம் நடைபெறுவதால், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுகிறது. அரசு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயன்றால், அரசே அதிரடியாக நடக்கிறது என்று குற்றச்சாட்டு கூறப்படும். ஆனால் முதலமைச்சர் மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றுத் தீர்வு காண்பவர். இது தான் உண்மையான சமத்துவ ஆட்சி.” என்றார்.