திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டை-பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பாகாலாவை அடுத்த காடங்கி சுங்கச்சாவடி அருகே உள்ள மூலவங்கா வனப்பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் மருந்து சீட்டு மற்றும் சில பொருட்கள் சிதறி கிடந்ததையடுத்து, இது குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், பாகாலா போலீசார் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்தவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த ப.கொந்தகை கிராமத்தைச் சேர்ந்த ஜெயமாலா, அவரது மகள்கள் தர்ஷினி (9), ஹர்ஷினி (3) மற்றும் அவரது பெரியம்மா மகன் கலைச்செல்வம் என உறுதி செய்யப்பட்டது.
ஜெயமாலாவின் கணவர் வெங்கடேஷ் குவைத்தில் வேலை பார்த்து வந்தவர். அவர் மனைவி ஜெயமாலா பெயரில் அடிக்கடி பணம் அனுப்பி வந்தார். அந்தப் பணத்தை கலைச்செல்வம் மூலம் வட்டிக்கு விடப்பட்டதாக தெரிகிறது. ஆனால் வட்டித்தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடும்பத்தில் பூசல் ஏற்பட்டது. கடந்த 2024 ஜூன் மாதம் குவைத்தில் இருந்து வீடு திரும்பிய வெங்கடேஷ், ஜெயமாலாவிடம் “அனுப்பிய பணம் என்ன ஆனது?” எனக் கேட்டதாகவும், அதற்குத் தெளிவான பதில் வராததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் அவர் மீண்டும் குவைத் திரும்பினார்.
இதற்கிடையில் கடந்த ஜூலை மாதம் தனது மனைவி மற்றும் குழந்தைகள் காணவில்லை என்ற தகவலை அறிந்ததும், அவர் உடனடியாக குவைத் நகரிலிருந்து திரும்பி, உறவினர்கள், நண்பர்கள் மூலம் தகவல் அறிய முயன்றார். எந்தத் தகவலும் கிடைக்காததால், திட்டச்சேரி போலீசில் புகார் அளித்தார். இந்தநிலையில், பாகாலா அருகே உள்ள வனப்பகுதியில் நான்கு பேரும் சடலமாக கிடந்தனர். இதில் ஜெயமாலா மற்றும் கலைச்செல்வத்தின் முகத்தில் துணி போர்த்தி, செல்லோ டேப்பால் ஒட்டப்பட்டிருந்தது, இது முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை எனக் கூறப்படுகிறது.
விசாரணையில், வட்டித் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் குடும்ப தகராறு காரணமாக கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதன் பின், சடலங்களை ஆந்திரா வனப்பகுதியில் எறியப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. தற்போது, இந்த மர்மமான மரணங்கள் தொடர்பாக, ஆந்திரா மற்றும் தமிழக போலீசார் இணைந்து விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகள் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என அறிய விசாரணை பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்படுகிறது.
