அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததையடுத்து, அவர் முகத்தை மூடிக்கொண்டு காரில் வெளியேறிய காணொளி சமூகவலைதளங்களில் வெகுவாக வைரலாகியுள்ளது. இதுபற்றி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்ச்சனங்களை முன்வைத்தார்.
இது தொடர்பாக, நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது: “செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், பழனிசாமி ‘தன்மானம் தான் முக்கியம்’ எனக் கூறினார். ஆனால், வானிலை காரணமாக சுற்றுப்பயணம் தள்ளிவைக்கப்படுவதாகக் கூறிய பிறகு, திடீரென டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்கிறார். இது ஏற்கனவே ஊடகங்களில் வெளியான தகவல்தான். அதனை மறைத்து செல்வதற்கான முயற்சி ஏன்? டெல்லி சந்திப்புக்குப் பிறகு, முகத்தை மூடிக்கொண்டு வெளியே வருவது போன்ற காட்சிகள் வரலாற்றில் எவரும் காணாத ஒன்று. இனிமேல், பழனிசாமியை ‘முகமூடியார் பழனிசாமி’ என்றே அழைக்க வேண்டும்.”
தொடர்ந்து அவர் கூறியதாவது: “அமித் ஷாவை சந்தித்த பிறகு, முதலில் அதிமுக நிர்வாகிகளை அனுப்பிவிட்டு, பின்னர் தனது மகனுடன் முகம் மூடியபடி பழனிசாமி வெளியேறினார். இது தொடர்பான விளக்கத்தை அவரே அளிக்க வேண்டும். எம்ஜிஆர் தொடங்கிய அ.தி.மு.க-வின் அடிப்படை விதி – தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே. அதை ஜெயலலிதா பின்பற்றியவர். ஆனால் பழனிசாமி, அந்த அடிப்படையை மாற்றியதால், இப்போது இது ‘அதிமுக’ அல்ல, ‘எடப்பாடி அதிமுக’ என மாற்றி வைத்துள்ளார். எத்தனை கூட்டணிகளை வைத்திருந்தாலும், வருகிற தேர்தலில் பழனிசாமி தோல்வியடைவது உறுதி.”
இதேநேரம், சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளி குறித்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு “எக்ஸ்” வழியாக விளக்கம் வெளியிட்டுள்ளது: “முகத்தை துடைத்தது மட்டுமே உண்மை. ஆனால், அதை முகத்தை மூடிக் கொண்டு சென்றதாக திமுகவினர் தவறாக செய்தி பரப்புகின்றனர். எடப்பாடியார், கருப்பு பலூன் பறக்கவிட்டு ஆட்சிக்கு வந்தவர் அல்ல. வெள்ளை குடை வைத்துக் கொண்டு இயக்கம் நடத்துபவர். வெளிப்படையாக உள்துறை அமைச்சரை சந்தித்து, வெளிப்படையாகவே வெளியே வந்தார்.முகத்தை மூடிக் கொள்ள வேண்டியது அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு தான். மேலும் சிறுவர்கள் முதல் வயதானோர் வரை பயப்படும் சூழல் உருவாக்கிய திமுக தான், மக்களை நேரில் சந்திக்கத் தயங்கும் நிலையில் இருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளனர்.
