அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த 16-ந்தேதி டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி, எம்.தம்பிதுரை, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், சுமார் 20 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடன் தனிப்பட்ட முறையில் பேசினார். இதையடுத்து, “இருவருக்கும் இடையே உரையாடலில் மொழிபெயர்ப்பு செய்தவர் யார்?” என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக எழுந்தது.
இதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பின்போது, மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் பாஷ்யம் அபினேஷ் என தகவல் வெளியாகியுள்ளது . இவர் பாஷ்யம் கட்டிட நிறுவனத்தின் தலைவரும், கடலூரைச் சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சர் எம்.பி. சம்பத்தின் நெருங்கிய உறவினரும் ஆவர்.
அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனுடன் நெருங்கிய நட்புறவு கொண்டுள்ள அபினேஷ், பெரும்பாலும் அமித்ஷாவின் இல்லத்தில் இருக்கக்கூடியவர் என கூறப்படுகிறது. கடந்த நிகழ்ச்சியிலும், தற்போது ஏற்பட்ட சந்திப்பிலும், அபினேஷ் தான் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமியின் தமிழில் கூறியவற்றை இந்தியில் மொழிபெயர்த்து அமித்ஷாவிடம் தெரிவித்ததும், அமித்ஷாவின் இந்திப் பேச்சுக்களை தமிழாக்கம் செய்து பழனிசாமியிடம் எடுத்துரைத்ததும் அபினேஷ் தான் என கூறப்படுகிறது. மேலும், இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு தொடர்பாகவும் அமித்ஷா உரையாடியதாக கூறப்பட்டாலும், இதனை எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
மேலும் இந்த சந்திப்பு முடிந்ததும், எடப்பாடி பழனிசாமி தனது கார் வழியாக திரும்பிச் சென்றபோது, கைக் குட்டையால் முகத்தை மூடியது கூட அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
