2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம், கடைசிப் பந்து வரை பரபரப்பின் உச்சத்திற்கே சென்றது. ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கக்கூடிய கடைசிப் பந்தில் நடுவர் எடுத்த முடிவு, தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெற்றிக்குக் கடைசி ஒரு பந்தில் 6 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் இலங்கை அணி இருந்தது.

களத்தில் கேப்டன் தசுன் ஷனகா இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி கடைசிப் பந்தை வீசினார். அவர் வீசிய அந்தப் பந்து, ‘ஆப் ஸ்டம்ப்’புக்கு மிக வெளியே, பேட்ஸ்மேன் தொட முடியாத உயரத்தில் சென்றது. ஆனால், நடுவர் அதற்கு ‘வைடு’ (Wide) வழங்க மறுத்துவிட்டார். இதனால் இலங்கை அணி நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது.

 

ஷாகின் அப்ரிடி வீசிய அந்தப் பந்து, ‘வைடு’ எனக் குறிக்கப்படும் நீல நிறக் கோட்டின்  மீதே விழுந்தது. பொதுவாக பந்து அந்தக் கோட்டின் மீது விழுந்தால், அது நடுவரின் விருப்பத்திற்கே விடப்படும். விதிகளின்படி, கோட்டின் மீது பந்து விழும்போது அதை வைடு என அறிவிப்பதும், அறிவிக்காமல் இருப்பதும் நடுவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த ஆட்டத்தில் நடுவர் அதற்கு வைடு கொடுக்காததால், அது சரியான முடிவாகவே கிரிக்கெட் விதிகளின்படி கருதப்படுகிறது.

இருப்பினும், ஒரு உலகக் கோப்பை போன்ற முக்கியத் தொடரில், ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு பந்தில் நடுவர் இவ்வளவு கடுமையான முடிவை எடுத்தது இலங்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுவரின் இந்த முடிவுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. “அது தெளிவான வைடு, இலங்கை அணிக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது” என ஒரு தரப்பினர் கூற, “விதிகளின்படி கோடு நடுவருக்குச் சொந்தமானது, எனவே இந்த முடிவு சரிதான்” என பாகிஸ்தான் ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.