இயற்கையின் விதி மிகவும் கொடூரமானது என்பதற்குச் சாட்சியாக, குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் முன்னிலையிலேயே சிங்கம் ஒன்று பசுவை வேட்டையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிர் சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள் ஜிப்சி வாகனத்தில் வனச் சுற்றுப்பயணம்  மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு சிங்கம்  தந்திரமாகச் சுற்றுலாப் பயணிகளின் வாகனத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டது.

எதிரே ஒரு பசு எதையும் அறியாமல் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது. வாகனம் நின்றிருந்ததால், அதன் பின்னால் சிங்கம் இருப்பதை அந்தப் பசு கவனிக்கவில்லை. பசு வாகனத்திற்கு மிக அருகில் வந்தவுடன், மின்னல் வேகத்தில் பாய்ந்த சிங்கம் அதன் கழுத்தைப் பிடித்து நிலைகுலையச் செய்தது.

சிங்கம் பசுவை வீழ்த்திய அடுத்த சில நிமிடங்களில், அங்கிருந்த ஒரு ஆண் சிங்கமும் கர்ஜனை செய்தபடி அங்கு வந்தது. இரண்டும் இணைந்து சில நிமிடங்களிலேயே அந்தப் பசுவை வேட்டையாடி முடித்தன. தங்கள் கண்களுக்கு முன்னால், சில அடி தூரத்திலேயே நடந்த இந்த மரணப் போராட்டத்தைக் கண்டு ஜிப்சியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் உறைந்து போயினர். அச்சத்திலும் வியப்பிலும் இந்த அரிய காட்சியைத் தங்களது மொபைல் போன்களில் அவர்கள் படம்பிடித்தனர்.

வழக்கமாகத் தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்கக்கூடிய இத்தகைய கொடூரமான வேட்டைக் காட்சியை நேரில் பார்த்த சுற்றுலாப் பயணிகள், “இயற்கை எவ்வளவு அழகோ, அவ்வளவு பயங்கரமானது” என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.