ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், “ஈரான் வீழ்ந்துவிட்டது” என்ற அமெரிக்காவின் தொடர் வாதங்கள் தற்போதைய கள நிலவரத்தால் கேள்விக்குறியாகியுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவின் இரு போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஈரானால் அழிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மார்ச் 24 அன்று பேசுகையில், “எங்கள் விமானங்கள் தெஹ்ரான் வான்பரப்பில் பறக்கின்றன, ஈரானால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் அதிநவீன F-15E ஸ்டிரைக் ஈகிள் மற்றும் A-10 வார்தாக் ஆகிய இரு விமானங்கள் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. குவைத்தில் உள்ள தளத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ‘சினுக்’ ஹெலிகாப்டர் அழிக்கப்பட்டதாகவும், மீட்புப் பணியில் ஈடுபட்ட இரு ‘பிளாக் ஹாக்’ ஹெலிகாப்டர்கள் ஈரானின் தாக்குதல் வளையத்திற்குள் சிக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் வான் பாதுகாப்பு மண்டலம் பலவீனமடைந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், அமெரிக்க விமானங்களை அவை எப்படி வீழ்த்தின என்பது ராணுவ வல்லுநர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னால் ஈரானின் ‘மஜித்’ என்ற ரகசிய வான் பாதுகாப்பு தொழில்நுட்பம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்ஃப்ராரெட் தொழில்நுட்பம் அமைப்பு ரேடார்களைச் சார்ந்து இயங்குவதில்லை. மாறாக, விமான இஞ்சினில் இருந்து வரும் வெப்பத்தை மோப்ப ம் பிடித்துத் தாக்குகிறது.
ரேடார் சிக்னல்கள் இல்லாததால், விமானிகள் தங்களைத் தாக்க ஏவுகணை வருவதைக் கண்டறிவதற்குள் காலம் கடந்துவிடுகிறது. சிறிய ரக ஏவுகணைகள் மூலம் குறைவான உயரத்தில் பறக்கும் அமெரிக்க விமானங்களை ஈரான் இலக்கு வைப்பதாகத் தெரிகிறது. ஈரான் தனது போர் உத்திகளை முழுமையாக மாற்றியுள்ளது. நிலையான ராணுவத் தளங்களுக்குப் பதிலாக, ‘மொபைல் லாஞ்சர்’ எனப்படும் நகரும் ஏவுகணை ஏவுதளங்களையும், மலைக்குகைகளுக்கு அடியில் உள்ள ரகசிய ‘ஏவுகணை நகரங்களையும்’ (Missile Cities) பயன்படுத்துகிறது.
அமெரிக்காவின் கடும் தாக்குதலுக்குப் பிறகும், ஈரானின் 50 சதவீத ஏவுகணை ஏவுதளங்கள் இன்னும் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்பான ‘சி.என்.என்’ (CNN) தெரிவித்துள்ளது. “தாக்குதல் நடத்திவிட்டு உடனடியாக மறைந்துவிடுதல்” என்ற கொள்கையை ஈரான் கையாள்வதால் அமெரிக்காவால் அவற்றை முழுமையாக அழிக்க முடியவில்லை.
ஈரானின் வான்பரப்பு அமெரிக்காவிற்கு இன்னும் பாதுகாப்பானதாக இல்லை என்பதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன. இருப்பினும், அமெரிக்காவின் ஒட்டுமொத்த ராணுவ பலம் ஈரானை விடப் பலமடங்கு அதிகம் என்பதால், ஈரான் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டது எனச் சொல்ல முடியாது. ஆனால், ஈரானை வீழ்த்துவது அமெரிக்கா நினைத்தது போல அத்தனை எளிதான காரியம் அல்ல என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது.
