பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் மனைவியின் காதல் தொடர்பு காரணமாக கணவன் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லகுனியா ரகு காந்த் கிராமத்தைச் சேர்ந்த சோனு குமார் (வயது 30) என்ற ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் காணப்பட்டதை அடுத்து, அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சோனுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சடார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
சோனுவின் தந்தை துன்துன் ஜா அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மனைவி ஸ்மிதா ஜா மீது போலீசார் முதற்கட்ட சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். சோனு மற்றும் ஸ்மிதா ஆகியோருக்கு ஆறு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். ஆனால், கடந்த சில மாதங்களாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. ஒரு கட்டத்தில் பஞ்சாயத்து வரை சென்று சமாதானம் செய்யப்பட்டும் பிரச்சனை தொடர்ந்து வந்ததாம்.
துன்துன் ஜா கூறியதின்படி, ஹரியோம் குமார் என்ற டியூஷன் ஆசிரியர் அவர்களது வீட்டிற்கு வந்து குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வந்துள்ளார். ஒருநாள் சோனு, தனது மனைவியையும் டியூஷன் ஆசானையும் சந்தேகத்திற்கிடமான நிலைமையில் பார்த்ததையடுத்து இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, டியூஷன் ஆசிரியர் வருவதையே நிறுத்தியிருந்தார். ஆனால் சில வாரங்கள் கழித்து, அவர் சோனுவின் அண்ணனின் குழந்தைகளுக்கு டியூஷன் ஆசிரியரை மீண்டும் வீட்டிற்கு வரவழைத்ததும் மீண்டும் தம்பதிக்குள் பதற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த நாளில், சோனு நள்ளிரவில் வேலை முடித்து வீடு திரும்பியுள்ளார். அவருடைய தந்தை ஏற்கனவே தூங்கச் சென்றுவிட்டிருந்த நிலையில், மறுநாள் காலை அவர் எழுந்தபோது சோனுவின் அறையில் ரத்தக் வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அருகில் அவரின் மனைவி ஸ்மிதா அமைதியாக உட்கார்ந்திருந்ததாகவும், சோனுவின் கழுத்தில் தாக்கிய அடையாளங்கள் இருந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் இந்தக் கொலைக்குப் பிற நபர்களும் உதவியிருக்கக்கூடும் எனவும் கூறினார்.
தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக ஸ்மிதா ஜா போலீசாரால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. குடும்பத்தினர் அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது காதல் தொடர்பால் நடத்தப்பட்ட திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பான உண்மை விரைவில் வெளிவரும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கொடூரம் சமூகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
