அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூஸிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக மூன்றாவது முறையாகவும் உலகக் கோப்பையை முத்தமிட்டு வரலாறு படைத்துள்ளது. இந்திய அணியின் இந்த வெற்றி ஒருபுறம் கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிரின் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, அவர் நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாக்கியுள்ளன.

இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்கியதில் இருந்தே, இந்திய அணி அரையிறுதிக்குக் கூடத் தகுதி பெறாது என்று முகமது  அமிர் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்து வந்தார். ஆனால், இந்திய அணியின் அபாரமான ஆட்டம் அமிரின் அனைத்துக் கணிப்புகளையும் தவிடுபொடியாக்கியது. இந்திய அணியின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அமிரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “இன்னும் தூக்கம் வருகிறதா அமிர்?” என்ற ரீதியில் கேள்விகளை எழுப்பி அவரைத் துளைத்தெடுத்து வருகின்றனர்.

இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா, வெறும் 21 பந்துகளில் 52 ரன்களைக் குவித்து நியூஸிலாந்து பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். அவரது இந்தத் துள்ளலான ஆட்டம், முகமது அமிரின் வாயை அடைத்துள்ளது. இணையதளங்களில் ரசிகர்கள், “அபிஷேக் சர்மா பந்துகளை அடிக்கும்போது, அதில் முகமது அ மிரின் முகத்தைப் பார்த்து வெளுத்திருப்பார் போலிருக்கிறது” என நக்கலான மீம்ஸுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

முகமது ஆமிரின் கடந்த கால கிரிக்கெட் நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தோண்டி எடுத்து ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் அமர்ந்து இந்திய அணி குறித்துத் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்த அமிர், இப்போது தனது தவறான கணிப்புகளுக்காகப் பதில் சொல்ல முடியாமல் மௌனம் காத்து வருகிறார்.

மேலும் உலகக் கோப்பையில் தனது பார்மைத் தக்க நேரத்தில் மீட்டெடுத்த அபிஷேக் சர்மா, இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணியின் இந்த மகுட சூட்டல், அமிரின் தவறான விமர்சனங்களைக் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளது. இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு, அமிர் தனது தொலைக்காட்சி விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.