இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமின் வடக்கு நுழைவாயிலில் உள்ள பேருந்து நிலையத்தில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் பரபரப்பாக காத்திருந்த அந்த இடத்தில், இரு பயங்கரவாதிகள் பேருந்தில் ஏறி, அங்கிருந்தவர்கள் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒரு காவலர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர், 12 பேர் படுகாயமடைந்த நிலையில் பயணிகள் அலறியடித்து ஓடிய நிலையில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தாக்குதல் நடத்திய இரு பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் தணிந்தது.

இந்தத் தாக்குதலை ஹமாஸ் அமைப்பு காசாவுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாகப் பாராட்டிய போதிலும், அவர்கள் இதற்கு பொறுப்பேற்கவில்லை. ஆனால், இஸ்ரேல் இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸே காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து, மேற்கு கரை நகரமான ரமல்லாவைச் சுற்றியுள்ள பாலஸ்தீன கிராமங்களில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். கடந்த இரு ஆண்டுகளாக இஸ்ரேல்-காசா இடையேயான மோதல் தொடரும் நிலையில், இந்தத் தாக்குதல் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தக் கொடூர தாக்குதலை வன்மையாகக் கண்டித்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார். “ஜெருசலேமில் அப்பாவி மக்கள் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலை கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். இந்தியா பயங்கரவாதத்தை எதிர்க்கும் தனது உறுதியான நிலைப்பாட்டில் தொடர்ந்து நிற்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி,” என எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார்.