தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று திருபுவனம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் நகை திருட்டு சந்தேக வழக்கில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் முதல்முறையாக நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சாத்தான்குளத்தில் தந்தை மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்காக போராட்டத்தில் இறங்கினீர்கள். அப்போது முதலமைச்சராக இருந்தவர் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய போது அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தீர்கள். அந்தப் போராட்ட குணம் இப்போது உங்களுக்கு எங்கே போனது முதல்வரே.
அஜித் குமாரின் தாயாரிடம் நீங்கள் எப்போது ஃபோன் போட்டு சாரி சொன்னீர்களோ அப்போதே உங்கள் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது. எங்கள் தலைவர் அஜித் குமார் வீட்டிற்கு சென்ற பிறகுதான் நீங்கள் ஏதோ நினைத்து சிபிஐ விசாரணைக்கு மாற்றினீர்கள். ஜெய் பீம் படத்தை பார்த்து அழுதீர்களே. படத்தை பார்த்து தான் அழுவீர்களா. உண்மையைப் பார்த்து அழ மாட்டீர்களா.
எங்கள் தலைவர் திமுக ஆட்சியில் மரணம் அடைந்த 24 குடும்பங்களையும் கண்ணீரையும் பார்த்த பிறகு இதற்கு ஒரு நியாயம் வேண்டும் நீதி வேண்டும் என்று தான் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எங்கள் தலைவர் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும். மேலும் இன்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு குற்றவாளியின் குழந்தையாக ஒவ்வொரு குடும்பத்தினரின் வேதனையையும் அந்த தாயாரின் கண்ணீரையும் துடைப்பதற்காகவே இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றார்.
