சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ‘ஜென்சி திமுக மீட் அப்’ (Gen Z DMK Meet up) நிகழ்ச்சியில், திமுக இளைஞர் ஒருவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) மிகக் காரசாரமாக விமர்சித்துப் பேசிய உரை தற்போது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. “ஜென்சி திமுக-ன்னு ஒரு மீட்டிங் நடத்துறாங்க, ஆனா தன்னிடம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கார்டு கூட கிடையாது” என்று வெளிப்படையாகத் தொடங்கிய அந்த இளைஞர், ஜென்சி என்று பெயர் வைத்த உடனே, “75 ஆண்டுகால பாரம்பரியமிக்க திமுகவில் எங்கே ஜென்சி இருக்கிறார்கள்?” என விமர்சித்தவர்களுக்கு மேடையிலேயே அதிரடி பதிலடி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜென்சி (Gen Z) இளைஞர்களை ஏதோ மொத்தமாக குத்தகைக்கு எடுத்தது போல ஒரு கட்சி (தவெக) சுற்றிக் கொண்டிருப்பதாகக் கடுமையாகச் சாடினார். “அந்தக் கட்சியின் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்கிறோம், இங்கு திரும்பிப் பாருங்கள்; எந்தவொரு முதியவரும் இல்லாமல் ஒட்டுமொத்த ஜென்சி படையும் இன்றைக்குத் தமிழ்நாட்டைக் காப்பதற்காக ஒரே அணியில் திரண்டிருக்கிறது. எனவே, ஜென்சிக்கு வாடகைக்கு காப்பிரைட்ஸ் எடுக்க நீங்கள் முயல வேண்டாம், அதை ஆல்ரெடி திமுக வாங்கி வைத்திருக்கிறது” என அவர் பேசிய பேச்சு தவெக மற்றும் திமுக தொண்டர்களிடையே சமூக வலைத்தளங்களில் விவாதத்தை அனல் பறக்க விட்டுள்ளது.
