மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள டி.கே. சிவகுமார், தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை முற்றிலும் மீறி அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்த விவகாரம் குறித்துப் பேசிய டி.கே.சிவகுமார், “தமிழக முதல்வருக்கு எதுவும் தெரியாது” எனக் கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் இந்தத் திமிர்ப் பேச்சைத் தமிழக காவிரி விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் சேலத்தில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார். ​மேலும் பேசிய பி.ஆர்.பாண்டியன், மேகதாது அணை விவகாரத்தில் டி.கே.சிவகுமார் இரு மாநிலங்களுக்கு இடையே இன கலவரத்தைத் தூண்டும் விதமாகச் செயல்பட்டு வருவதாகவும், இதனை மத்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 25 லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுப் பாலைவனமாகும் அபாயம் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசின் துணையோடுதான் கர்நாடக அரசு செயல்படுகிறதோ என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.