தவெக மீது அண்ணா திமுகவினர் வைக்கும் குதிரைப்பேரப் புகார்களுக்குத் தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களைப் பொறுத்தவரையில் எங்களுக்குக் குதிரை பேரமோ அல்லது வேறு எந்த பேரமோ தேவையில்லை. தனித்தே நின்று களம் கண்டு, மக்கள் ஆதரவோடு மாபெரும் வெற்றி பெற்றிருக்கிற ஒரு இயக்கம் நம்முடைய தமிழக வெற்றிக்கழகம்.
வெறும் இரண்டே ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டில் நிலவி வந்த பண ஜனநாயகத்தை மொத்தமாக முறியடித்து, ஒரு உண்மையான ஜனநாயகத்தை உருவாக்கி இருக்கிற மாபெரும் மக்கள் இயக்கம் இது. நம்முடைய தலைவரைப் பொறுத்தவரை அவர் மக்களை நேசிக்கிற தலைவர், மக்களால் அரியணையில் கொண்டு வரப்பட்டிருக்கிற தலைவர்!” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அதிமுக-வுக்கு பகிரங்க வார்னிங் கொடுத்த அவர், “இந்தியாவில் எந்த ஒரு அரசியல் இயக்கத்திற்கும் இதுவரை இதுபோன்ற அசுரத்தனமான வரலாறுகள் இல்லை. அப்படிப்பட்ட மாபெரும் வரலாறு படைத்த நம்முடைய தலைவருக்குப் பின்னாலே இன்றைக்கு மக்கள் கூட்டமும், தலைவர்களும் அணிவகுத்து நின்று இணைந்து கொண்டிருக்கிறார்கள்.
அண்ணா திமுகவில் இருக்கிற சில பேர் தவெக-வை பார்த்து, ‘இது என்ன குதிரை பேரமா, லாட்டரி பேரமா?’ என்று கேட்கிறார்கள். லாட்டரி எங்கே இருக்கிறது, யார் கையில் இருக்கிறது என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும், நீங்கள் அதனை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் அதிரடியாகப் பேசி விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
